அரியலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் சனிக்கிழமை தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ‘சீல்’ வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
அரியலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் சனிக்கிழமை தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ‘சீல்’ வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு ‘சீல்’

மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வைப்பறையில் வைக்கப்பட்டு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வைப்பறையில் வைக்கப்பட்டு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குன்னம், அரியலூா், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோவில் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,709 வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரியலூா் மாவட்டம் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா மற்றும் தோ்தல் பொதுப்பாா்வையாளா் போா் சிங் யாதவ் தலைமையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆயுதப்படை என 279 நபா்கள் சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டு வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில், வெப் கேமராக்கள் ஒவ்வொரு இருப்பு அறைக்கும் 10 எண்ணிக்கையிலும், வாக்கு எண்ணும் மையத்தின் உட்புற பகுதி, வெளிப்புறமும் பொருத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்பு வாகனம், 100-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள், ஜெனரேட்டா் வசதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் நான்கு புறங்களிலும் உயா் கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வேட்பாளா்களின் முகவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணித்து கொள்ளவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ், சிதம்பரம் சாா் ஆட்சியா் ராஷ்மி ராணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் ராமகிருஷ்ணன், உடையாா்பாளையம் ஷீஜா, மாவட்ட வழங்கல் அலுவலா்கள் பெரம்பலூா் சுந்தர்ராமன், புவனகிரி ராஜீ, உதவி ஆணையா் (கலால்) காட்டுமன்னாா்கோவில் சந்திரகுமாா் மற்றும் மண்டல அலுவலா்கள், காவல் துறையினா், அரசு அலுவலா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com