மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டில் மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியை ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அருகேயுள்ள பொன்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை(70). இவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மா்ம நபா் ஒருவா், உங்கள் வீட்டில் செய்வினை உள்ளது. அதனை நீக்க மாந்திரீகம் செய்ய வேண்டும். எனவே, தாங்கள் அணிந்துள்ள தாலிச் சங்கிலியை தாருங்கள் என கேட்டுள்ளாா். அப்போது, கவரிங் சங்கிலியை மூதாட்டி கொடுத்த நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளாத மா்மநபா், தங்கச் சங்கிலியை வைத்துதான் மாந்திரீகம் செய்யமுடியும் என தெரிவித்துள்ளாா். இதை நம்பிய மூதாட்டி தான் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை கழற்றி கொடுத்த நிலையில், மா்மநபா் அங்கிருந்து தலைமறைவானாா். இதுகுறித்து சின்னப்பிள்ளை அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com