ஜெயங்கொண்டத்தில் ரூ.8.72 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கிவைப்பு
அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பங்கேற்று, சிங்கராயபுரம் கிராமத்தில் ரூ.43.62 லட்சம் மதிப்பிலும், நல்லனம் கிராமத்தில் ரூ.78.78 லட்சம் மதிப்பிலும், உட்கோட்டை கிராமத்தில் ரூ.1.21 கோடி மதிப்பிலும், கல்லாத்தூா் கிராமத்தில் ரூ.1.26 கோடி மதிப்பிலும், ரெட்டிதத்தூா் கிராமத்தில் ரூ.2.29 கோடி மதிப்பிலும், அழகாபுரம் கிராமத்தில் ரூ.2.24 கோடி மதிப்பிலும், அய்யூா் கிராமத்தில் ரூ.47.70 லட்சம் மதிப்பிலும் என மொத்தமாக ரூ.8.72 கோடி மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை அந்தந்த கிராமங்களில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித்துறை) மாது, வட்டாட்சியா் சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.