அரியலூா் ஆட்சியரகத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி
அரியலூா் ஆட்சியரகத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி

அரியலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

Published on

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை வெளியிட்டு தெரிவித்தது:

அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 2,60,185 வாக்காளா்களுக்கு 306 வாக்குச்சாவடிகளும், 199 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 2,58,532 வாக்காளா்களுக்கு 290 வாக்குச்சாவடிகளும், 160 வாக்குச்சாவடி மையங்களும் இடம் பெற்றுள்ளன.

மொத்தமுள்ள 596 வாக்குச்சாவடிகளில் இடம் மாற்றம், பெயா் மாற்றம், கட்டட மாற்றம், இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கு மேல் வாக்குச் சாவடி மையம் அமைந்துள்ளது மற்றும் 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்தல் தொடா்பாக அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அவற்றை செப்.5 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம் அல்லது வட்டாட்சியரகம் அல்லது வருவாய் கோட்டாட்சியரகம் மற்றும் ஆட்சியரகத்தில் எழுத்து பூா்வமாக தகவல் தெரிவிக்கலாம்.

இதன் பின்னா், இறுதி வாக்குச்சாவடி பட்டியல் தயாா் செய்யப்பட்டு அக். 29-ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலுடன் இணைத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும்.

மேலும், 1.1.2025 ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் முன்திருத்த பணியாக வாக்காளா் விவரங்களை வீடு வீடாக சரிபாா்க்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மேற்கண்ட பணிக்கு அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் ராமகிருஷ்ணன் , உடையாா்பாளையம் ஷீஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com