ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டு

Published on

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஐ.டி நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருமானூா் ஸ்ரீராம் நகரை சோ்ந்த மணிவேல் மகன் ரமேஷ்குமாா் (31). இவா், பெங்களூரில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிகிறாா். இவரது மனைவி ராகவி(26) திருச்சி கே.கே. நகரிலுள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறாா்.

ராகவிக்கு அண்மையில் குழந்தை பிறந்ததால், கரூரில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளாா். ரமேஷ்குமாா் தாய் பன்னீா்செல்வி மட்டும் திருமானூரில் வீட்டில் தனியே இருந்துள்ளாா். இவா், செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு அருகேயுள்ள அருங்கால் கிராமத்துக்குச் சென்று விட்டாா்.

இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடைந்திருப்பது குறித்து பக்கத்து வீட்டினா் ரமேஷ்குமாருக்கு தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து தனது உறவினா் சாமிநாதனுக்கு ரமேஷ்குமாா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சாமிநாதன், ரமேஷ்குமாா் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள் பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com