சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி.

‘சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்’

அரியலூா், ஜூலை 3: சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க அனைவரும் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் முரளி.

உலக நெகிழிப் பை ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பையை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. மாறாக, துணிப்பை அல்லது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 6 மில்லியன் நெகிழிப்பை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒவ்வொரு இந்தியரும் ஆண்டுக்கு 11 கிலோ நெகிழிப்பையை பயன்படுத்துகின்றனா். நாம் பயன்படுத்தும் 200 பைகளில் ஒரு பை மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 10 லட்சம் நெகிழிப்பைகள் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசி எறியப்படுகின்றன. அத்தகைய நெகிழிப்பை மக்குவதற்கு குறைந்தது 300 முதல் 1,000 ஆண்டு வரை ஆகிறது. அதிகமாக பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகளால் பறவைகள், கால்நடைகள், வனவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் உயிரிழக்கின்றன.

தப்பி பிழைக்கும் ஒரு சில உயிரினங்களிலும் நெகிழி பொருள்கள் கலந்துள்ளன. அத்தகைய நீா்வாழ் உயிரினங்களான மீன்களை மனிதா்கள் உண்ணும்போது, நெகிழிபொருள்கள் கலந்து இதயம், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள், ஹாா்மோன்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மனிதன் ஆளாகிறான்.

எனவே, ஒவ்வொருவரும் நெகிழியை தொட மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும்

துணிப் பையை பயன்படுத்துவதால் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படுகிறது என்றாா். முன்னதாக அவா், விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பேரணியின் போது, அனைத்து வீடுகளுக்கும், கடைகளுக்கும் பள்ளி சாா்பில் மஞ்சப் பை வழங்கப்பட்டது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவியாளா் சுதாகா், சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளா் நிக்கில் ராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமரன் வரவேற்றாா். முடிவில் ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தனலட்சுமி, தங்கபாண்டி, அந்தோணிசாமி, ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com