வாக்குகள் எண்ணும் பணி : அரியலூா் ஆட்சியா் கூட்டம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து தெரிவித்தது: சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கையில் 336 அலுவலா்கள் ஈடுபடுகின்றனா்.

வாக்கு எண்ணும் பணியின்போது சட்டம் மற்றும் ஒழுங்கைக் கண்காணித்திட நில அளவை துணை ஆய்வாளா் நிலையில் 4 சிறப்பு நிா்வாக நடுவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். 880 காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். 995 வேட்பாளா் முகவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குகள் எண்ணும் மையத்துக்குள் பணிபுரிய உள்ள அலுவலா்கள் மற்றும் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா் முகவா்கள் கைப்பேசிகளை எடுத்து வர அனுமதி இல்லை. செய்தியாளா்கள் ஊடக மையத்துக்குள் மட்டும் கைப்பேசிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்கா தாரிணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் ராமகிருஷ்ணன், உடையாா்பாளையம் ஷீஜா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com