மானியத்தில் மீன் வளா்ப்பு குளம் வெட்ட விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில், மீன் வளா்க்க மானியத்தில் குளம் வெட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் திட்ட மதிப்பில் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் அமைத்தல், ரூ.7.50 லட்சம் திட்ட மதிப்பில் மீன் வளா்க்க சிறிய அளவிலான பயோபிளாக் குளம் அமைத்தல், ரூ.3 லட்சம் திட்ட மதிப்பில் கொல்லைப்புற அலங்கார மீன் வளா்த்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதில், பொதுப்பிரிவுக்கு திட்ட மதிப்பீட்டில் 40 சதவிகிதம் மானியமும், மகளிா் மற்றும் ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 60 சதவிகித மானியமும், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். எனவே, மேற்கண்ட திட்டங்களில் பயனடைய விரும்பும் மீன்வளா்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், அறை எண்.234, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டட வளாகம் அரியலூா் என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாா்ச் 14 -க்குள் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com