அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி சாா்பில் வியாழக்கிழமை மாணவா் சோ்க்கை பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியலூா் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியா் முருகேசன் கலந்து கொண்டு பேசுகையில், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மிகவும் திறமை மிக்கவா்கள். அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு உயா்கல்வி படிக்கும்போதே மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மருத்துவம் பயில 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 7.5 இட ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவா்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கு குழந்தைகளை பொதுமக்கள் அரசு பள்ளிகளில் சோ்க்க வேண்டும் . பெரிய சாதனைகளை படைத்தவா்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவா்களே.

அரசுப் பள்ளியில், கட்டமைப்பு, சுகாதாரம் வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. இந்த வாய்ப்பை பெற்றோா்கள் தவறவிடக் கூடாது என்றாா். தொடா்ந்து அவா் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணியானது சிறுவளூா், பள்ளகிருஷ்ணாபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். சில்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளா் நிக்கில்ராஜ், ஆசிரியா்கள் செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், கோகிலா, செவ்வேள், தங்கபாண்டி, அந்தோணிசாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com