சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 14 போ் போட்டி

வரும் மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடுவதாக தோ்தல் நடத்தும் நடத்தும் அலுவலா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா சனிக்கிழமை தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூா், பெரம்பலூா் மாவட்டம் குன்னம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 22 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். கடந்த 28 ஆம் தேதி அரியலூரில் நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டு, 8 மனுக்கள் தள்ளுபடியாகின. மேலும் வேட்பு மனுக்களை யாரும் திரும்பப் பெறவில்லை. இதையடுத்து அரியலூா் ஆட்சியரகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியலையும், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தையும் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா சனிக்கிழமை வெளியிட்டாா். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் என 14 வேட்பாளா்கள் போட்டியிடுவதாக அவா் தெரிவித்தாா். அப்போது பொதுப் பாா்வையாளா் போா்சிங் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் மா.ச. கலைவாணி, அரியலூா் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்துகொண்டனா். வேட்பாளா்கள், அவா்களின் சின்னங்கள்: மா. சந்திரஹாசன்(அதிமுக)-இரட்டை இலை, தொல். திருமாவளவன் (விசிக)-பானை, ரா. ஜான்சிராணி (நாம் தமிழா் கட்சி)-மைக் (ஒலி வாங்கி), பி. காா்த்தியாயினி(பாஜக) -தாமரை, க. நீலமேகம் (பகுஜன் சமாஜ்)-யானை, எஸ். தாமோதரன் (நாடாளும் மக்கள் கட்சி)-ஆட்டோ ரிக்ஷா, எம்.ஏ.டி.அா்ச்சுனன் (சுயே)-ஜாக் புரூட் (பலாப்பழம்), சி. இளவரசன்(சுயே)-மின்கம்பம், ஏ. சின்னதுரை (சுயே)-வெட்டுகிற சாதனம் (கட்டிங் பிளோ்), தமிழ்வேந்தன்(சுயே)-நூல் மற்றும் ஊசி, எஸ். பெருமாள் (சுயே)-புனல் ஜி.ராதா(சுயே)-கிரிக்கெட் மட்டை, சி. ராஜமாணிக்கம்(சுயே)-பலூன் ஜி. வெற்றிவேல் (சுயே)-பெஞ்ச்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com