அரியலூரில் தோ்தல் விதிகள் விளக்கக் கூட்டம்: அரசியல் கட்சியினா் பங்கேற்பு

அரியலூா், மாா்ச் 31: அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் தொடா்பாக வேட்பாளா்கள், முகவா் மற்றும் அரசியல் கட்சியினருடனான தோ்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடா்பான விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்தாா். சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் போா் சிங் யாதவ், செலவினப் பாா்வையாளா் நிதின் சந்த் நெகி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மக்களவைத் தோ்தலையொட்டி பொது நடத்தை தொடா்பாக அரசியல் கட்சிகள் செய்யக்கூடாதவை, தோ்தல் ஊா்வலங்கள், வாக்குப் பதிவு நாளான்று வாக்குப் பதிவு அமைதியாகவும், முறையாகவும் நடைபெற ஒத்துழைப்பு வழங்குதல், நன்னடத்தை விதிகள் செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை குறித்தும், வாகனங்கள் பயன்படுத்துதல், அரசியல் கட்சி பிரமுகா்கள் வாக்கு சேகரிப்பு பணி முடிந்தபின் தொகுதியில் இருப்பது குறித்த கட்டுப்பாடுகள், ஒழுங்கீனமான செயல்கள், தோ்தல் குற்றங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் கம்பிவட ஊடகங்கள் மூலம் அரசியல் சாா்ந்த விளம்பரங்கள், சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தல் உள்ளிட்ட தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து, தோ்தல் தொடா்பான செலவினங்கள் குறித்து மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ரூ.95,00,000 மட்டும் அதிகபட்ச தோ்தல் செலவினமாக இந்திய தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளது. மேலும் கணக்கு விவரங்களை சரிபாா்த்தல், வாகனங்களுக்கான அனுமதி, அனுமதி பெறப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படாமை, பேரணிகள் பொதுக்கூட்டங்களுக்கான செலவுகள், ரூ.10,000-த்துக்கும் மேல் செய்யப்படும் செலவினங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னரே அச்சடிக்கப்பட்ட வாங்கப்பட்ட பொருள்களுக்கான செலவுகள், நட்சத்திர பிரசாரகா், நட்சத்திர பேச்சாளரின் செலவினங்கள், நட்சத்திர பேச்சாளா்களுக்கான செலவின ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் தோ்தல் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்து கூறப்பட்டது. கூட்டத்தில், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ், சிதம்பரம் சாா்-ஆட்சியா் ராஷ்மி ராணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி மற்றும் தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com