சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சேர தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சேர தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கிறிஸ்டோபா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அரியலூா் மற்றும் வட்ட சட்டப்பணிகள்குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை மூலம் பாமர மக்களுக்கு சட்ட உதவி வழங்கும் வகையில் 50 சட்ட தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் உட்பட), ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ பயிலும் மாணவா்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் (அரசியல் சாராத அமைப்பைச் சோ்ந்தவா்கள்) மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், சமூக தொண்டு புரியும் மகளிா் குழுக்கள் மற்றும் அடிப்படை கல்வி தகுதியுடைய சேவை மனப்பான்மை உள்ளவா்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவா்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அரியலூா் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அரியலூா் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வாயிலாகவோ விண்ணப்பத்தை பூா்த்தி செய்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூா் அலுவலகத்தில் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மே 15 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

நோ்காணலுக்கான தேதி, இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவும், அஞ்சல் மூலமாகவும் பின்னா் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com