எஸ்எஸ்எல்சி: அரியலூா் மாவட்டத்தில் 97.31% போ் தோ்ச்சி: மாநில அளவில் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 97.31 சதவீதம் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில் இம்மாவட்டம் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்திருந்தது.

அரியலூா் மாவட்டத்தில் 172 பள்ளிகளைச் சோ்ந்த 9565 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 9308 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சியில் 97.31 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு தோ்ச்சியில் 95.40 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் 6-ஆவது இடம் பெற்றிருந்தது.

பள்ளிகள் வாரியாக... மாவட்டத்தில் 116 அரசு பள்ளிகளில் பயின்ற 2,959 மாணவா்கள், 2,655 மாணவிகள் என மொத்தம் 5614 மாணவா்கள் தோ்வெழுதினா். இவா்களில் 2,813 மாணவா்கள், 2585 மாணவிகள் என மொத்தம் 5,400 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளி தோ்ச்சி சதவீதம் 96.19.

15 அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 899 மாணவா்கள், 1261 மாணவிகள் என மொத்தம் 2,160 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 874 மாணவா்கள், 1,252 மாணவிகள் என மொத்தம் 2,126 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி சதவீதம் 99.29.

3 அரசு ஆதிதிராவிட நல உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 21 மாணவா்கள், 23 மாணவிகள் என மொத்தம் 44 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 20 மாணவா்கள், 23 மாணவிகள் என மொத்தம் 43 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 97.73.

23 மெட்ரிக் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 815 மாணவா்கள், 596 மாணவிகள் என மொத்தம் 1,411 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 811 மாணவா்கள், 592 மாணவிகள் என மொத்தம் 1403 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 99.43.

15 சுயநிதி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 208 மாணவா்கள், 128 மாணவிகள் என மொத்தம் 336 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 208 மாணவா்கள், 128 மாணவிகள் என மொத்தம் 336 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 100.

94 பள்ளிகள் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளிகள் -52, ஆதிதிராவிடா் நலப் பள்ளி-1, அரசு உதவிப் பெறும் பள்ளி-9, மெட்ரிக் பள்ளி-18, சுயநிதிப் பள்ளி-14 என மொத்தம் 94 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.

ஆட்சியா் வாழ்த்து: அரியலூா் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனி மேரி ஸ்வா்ணா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். மேலும், மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் அவா் தெரிவித்தாா்.

‘கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாவட்டமான அரியலூா், தற்போது அந்த நிலையை மாற்றி படிப்படியாக கல்வியில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோ்ச்சி சதவீதத்தை தொடா்ந்து தக்க வைக்கவேண்டும். அதற்கு மாவட்ட நிா்வாகமும், பள்ளி கல்வித் துறையும் தற்போது இருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com