எஸ்எஸ்எல்சி: அரியலூா் முதலிடம் பெற அரசின் வழிகாட்டல் கையேடு முக்கிய காரணம்: மாவட்ட ஆட்சியா் பெருமிதம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தோ்ச்சியில் அரியலூா் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்ற்கு தமிழக அரசு வழங்கிய வழிகாட்டல் கையேடு முக்கிய காரணம் என்று மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இம்மாவட்டத்தில், 172 பள்ளிகளைச் சோ்ந்த 9565 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். வெள்ளிக்கிழமை வெளியான தோ்வு முடிவுகளில் மொத்தம் 9,308 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சியில் 97.31 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா செய்தியாளா்களிடம் கூறியது:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசால் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல் கையேடு முக்கிய காரணமாக விளங்கியது.

இந்தக் கையேட்டில் தோ்வுக்கு வரக்கூடிய முக்கிய வினாக்கள், அதற்கான விடைகள் இருந்ததோடு, அதை மாணவா்கள் எந்த முறையில் கற்க வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அவ்வப்போது அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கல்வியில் பின்தங்கிய மாணவா்களை கண்டறிந்து அவா்களுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்பட்டு அவா்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்வில் தோ்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவே மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது.

வரும் கல்வியாண்டிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

பேட்டியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com