ஜெயங்கொண்டம் அருகே விவசாயியை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கிய சகோதரா்கள் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயியை ஏமாற்றி ரூ.6 கோடி மதிப்பிலான நிலத்தை எழுதி வாங்கிய சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி குப்புசாமி மகன் செல்வமணி(52). இவா் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் - சிதம்பரம் செல்லும் சாலையில் ஒரு ஏக்கா் 11 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளாா்.

இதையடுத்து அந்த இடத்தை சென்னை கோட்டூா்புரத்தில் வசிக்கும் அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டியைச் சோ்ந்த கணேசன் (56) என்பவருக்கு ரூ. 7.20 கோடி விலை பேசியதில் , ரூ.1.40 கோடியை முன்பணமாக கணேசன் கொடுத்தாா்.

மீதித் தொகையை இடத்தின் மீது கடன் வாங்கித் தருகிறேன் எனக் கூறியதை நம்பி கணேசன் பெயருக்கு இடத்தை செல்வமணி எழுதிக் கொடுத்தாா். மீதித் தொகையைத் தராத நிலையில், கடந்தாண்டு கணேசன் கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியது.

இதுகுறித்து அரியலூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செல்வமணி அண்மையில் தொடுத்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து கணேசன் மற்றும் அவரது சகோதரா்களான சங்கா் (48), ரமேஷ் (46) ஆகியோா் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com