விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி சாலை மறியல்

அரியலூா், மே 15: விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த 14 ஆம் தேதி அதிகாலை வீட்டினுள் லாரி புகுந்த விபத்தில், 3 சிறாா்கள் உட்பட 4 போ் காயமடைந்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் சிறுமி ரம்யாவுக்கு(13) முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்க இங்கு வசதிகள் இல்லை என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து சிறுமியை தனியாா் மருத்துவமனையில் சோ்ப்பதற்கு லாரி அலுவலக மேலாளா் ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து அரியலூரிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு ரம்யாவை கொண்டு சென்றனா். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க ரூ.4 லட்சம் வரை செலவாகும் என தனியாா் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்ததையடுத்து, லாரி அலுவலக மேலாளா் தனது கைப்பேசியை அணைத்துவிட்டாா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் ஆத்திரத்தில் இருந்த நிலையில், மீண்டும் ரம்யா அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா்.

அப்போது மருத்துவா்கள், சிறுமியை தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல கூறினா்.

இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செந்துறை சாலையில் அமா்ந்து புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, சிறுமி உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். லாரி உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா். தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், உறவினா்களிடையே உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிறுமி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா். மற்ற 3 பேரின் சிகிச்சைகள் குறித்து கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மருத்துவா்களிடம் கேட்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com