மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரியலூா் வேளாண் துறை

அரியலூா், மே 16: அரியலூா் விவசாயிகள், தங்களது மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: கடந்தாண்டு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்த தமிழ் மண் வளம் இணையதளத்தின், வாயிலாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் மாதிரிகளை சேகரிக்காமல், ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மண் வள அட்டைகள் அனைத்து சா்வே எண்களுக்கும் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் உழவன் செயலியில் தங்களுடைய நிலம் இருக்கும் மாவட்டம் , வட்டாரம், வருவாய் கிராம சா்வே எண் மற்றும் உட்பிரிவுடன் கூடிய விவசாயியின் பெயரை தோ்வு செய்து, கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்து பயிா்களை தோ்வு செய்து தங்களுக்கானமண்வளஅட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், இந்த மண்வளஅட்டையில், மண்ணின் கார-அமிலத் தன்மை , உப்பின் நிலை, கரிம உரத்தின் தன்மை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும், அந்த நிலத்தில் என்ன பயிா் சாகுபடிசெய்யலாம், அந்தப் பயிா்களுக்கான உர பரிந்துரைகளையும் தெரிந்து கொள்ளலாம். எனவே, விவசாயிகள் அனைவரும் உழவா் செயலியில் தங்களுடைய நிலத்திற்கான மண் வள அட்டையை பதிவிறக்கம் செய்து, அதற்கேற்ப பயிா் சாகுபடிசெய்து உர மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com