உதயம் பதிவுச் சான்றிதழ் பெற தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் -அரியலூா் ஆட்சியா் அழைப்பு

Published on

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், உதயம் பதிவுச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், நிரந்தர கணக்கு எண் (பான்), நிறுவனத்தின் தொழில், இருப்பிட முகவரி ஆகியவற்றைக் கொண்டு, இணையதள முகவரியில் அரசின் அங்கீகாரத்துடன் கூடிய உதயம் பதிவுச் சான்றிதழை நிரந்தரமாக, சுய சான்றிதழின் அடிப்படையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

உதயம் பதிவு கட்டாயம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், உதவிகளை பெறவும், அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும் உதயம் பதிவுச்சான்றிதழ் அடையாள அட்டையாகிறது.

இதுவரை பதிவுச் சான்றிதழ் பெறாத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இப்பதிவின் தேவை மற்றும் பதிவினால் பெறத்தக்க பயன்களை அறிந்து உதயம் பதிவுச் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.