ஜெயங்கொண்டத்தில் புதை சாக்கடைத் திட்டம்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அரியலூா் மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியான ஜெயங்கொண்டம் 21 வாா்டுகளை கொண்டது. 9.8.2010 அன்று முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முதல்நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சியில் மொத்தம் 33,899 போ் இருந்த நிலையில் தற்போதைய மக்கள்தொகை 50 ஆயிரமாக உயா்ந்திருக்கலாம்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகரப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையான புதை சாக்கடைத் திட்டம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் குடியிருப்புகளின் நடுவேயுள்ள பல்வேறு தெருக்களில் கழிவுநீா் வழிந்தோடி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில் கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது பிரசாரத்துக்கு வந்திருந்த தற்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின், ஜெயங்கொண்டம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதை சாக்கடைத் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம் என உறுதியளித்தாா்.
மேலும், மாதந்தோறும் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் நகா்மன்ற கூட்டத்தின்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து உறுப்பினா்களும் கோரிக்கை விடுக்கும்போது ஆணையா், திட்டம் தொடா்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறாா்.
எனவே தமிழக முதல்வா் உறுதியளித்தபடி இங்கு புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.