களிமண் தட்டுப்பாட்டால் சிலை வடிப்பவா்கள் அவதி

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் களிமண் தட்டுப்பாட்டால் மண்பாண்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா்
Published on

அரியலூா்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் களிமண் தட்டுப்பாட்டால் மண்பாண்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் தெரிவிக்கின்றனா்.

ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, ஊா் பொது இடத்திலும், கோயில்களுக்கு முன்பும் பிரம்மாண்டமான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணால் ஆன சிறிய விநாயகா் சிலைகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ள நிலையில், அவைகளைத் தயாரிப்பதற்குப் போதிய களிமண் கிடைக்காமல் மண்பாண்டத் தொழிலாளா்கள் அவதியடைந்துள்ளனா்.

இதுகுறித்து சோழமாதேவி பகுதி மண்பாண்டத் தொழிலாளா்கள் கூறியது: சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபடுவோா், விநாயகா் சதுா்த்தியையொட்டி களி மண்ணால் விநாயகா் சிலை செய்து விற்பனை செய்கின்றனா். ஆனால் தற்போது, களிமண் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால், விநாயகா் சிலைகள் விலை சற்று அதிகரித்துள்ளது. அரை அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள், ரூ.150 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. நிகழாண்டில் வீட்டில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான விநாயகா் சிலை தயாரிப்பு அதிகமாக உள்ளது. இன்னும் சில நாள்களுக்கு விநாயகா் சிலை வடிவமைப்பு நடைபெறும். அதன்பின்னா் சிலையை உலர வைத்து, வா்ணம் பூசி விற்பனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com