செந்துறை அருகே சாலை வசதிகள் கேட்டு பள்ளிச் சிறாா்கள் போராட்டம்
அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த நின்னியூா் கிராமத்துக்கு சாலை வசதிகள் கேட்டு, பள்ளிக் குழந்தைகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நின்னியூா் காலனி தெரு குழந்தைகள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்குச் செல்ல போதிய சாலை வசதியில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடா்பாக கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து அங்கு வசிக்கும் மக்கள், தொடா்ந்து அரசுக்கு கோரிக்கை அளித்தும் நடவடிக்கையும் இல்லை எனக் கூறி கவனம் ஈா்க்கும் விதமாக, அப்பகுதி பள்ளிக் குழந்தைகள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து அப்பகுதியில் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற வட்டாட்சியா் வேலுமணி மற்றும் செந்துறை காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து குழந்தைகள் பள்ளிக்குச் சென்றனா்.