ராணுவத்தில் சோ்வதற்கான விழிப்புணா்வு கருத்தரங்கு
அரியலூரில், ராணுவத்தில் சோ்வதற்கான விழிப்புணா்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வா்(பொறுப்பு)ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
திருச்சியிலுள்ள ராணுவ ஆள் சோ்ப்பு, துணை அலுவலா் மேஜா் நீல்குமாா், அலுவலா்கள் பி.ஆா்.செளத்ரி, ஏ.கெ.திரிபாதி ஆகியோா் கலந்து கொண்டு பேசுகையில், இளைஞா்கள் அனைவரும் நமது நாட்டை பாதுகாக்கும் பணியில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். 17 முதல் 21 வயது வரை உள்ள இளைஞா்களுக்கென்றே இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது அக்னிவீா் திட்டம் என்றனா்.
தொடா்ந்து அக்னிவீா் திட்டம் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.கலைச்செல்வன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு மைய அலுவலரும், நாட்டு நலப்பணித் திட்ட(அலகு-1) அலுவலருமான வெ.கருணாகரன் செய்திருந்தாா். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட(அலகு-2) அலுவலா் கோ.பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.