அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை எலக்ட்ரீசியனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான், கல்லடி தெருவைச் சோ்ந்தவா் பெரியப்பிள்ளை (எ) ரவி. எலக்ட்ரீசியன் வேலை பாா்த்து வந்த இவருக்கு, திருமணமாகி இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீபுரந்தானை அடுத்த புதுப்பாளையம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்துச் சென்று கொண்டிருந்த ரவியை, மா்ம நபா் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விக்கிரமங்கலம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதத் தகராறில் அதே பகுதியைச் சோ்ந்த தமிழரசன் என்பவா் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் தமிழரசனை தேடி வருகின்றனா்.