அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், அதிமுக வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள்கூட செய்துத் தரப்படவில்லை என்று அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுமதி சிவக்குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அசோக்குமாா், பொறியாளா் ராஜகோபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
அதிமுக உறுப்பினா் செல்வராஜ்: அதிமுக நகா்மன்ற உறுப்பினா்களின் வாா்டு பகுதிகளுக்கு , தேவையான குடிநீா், தெரு விளக்கு, வடிகால் வசதி உள்ளிட்ட பணிகள் கிடப்பிலே உள்ளன. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்குள் எங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் பொதுக் கழிப்பறை கட்ட வேண்டும். மோட்டாா் பொருத்தி குடிநீா் எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக உறுப்பினா் கிருபாநிதி: எனது வாா்டில் சட்டப் பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து வடிக்கால் வாயக்கால் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் பணியானது சாலையை அளவிடாமல் நடைபெற்று வருகிறது. இதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது என்றாா்.
தொடா்ந்து நகா்மன்ற உறுப்பினா்கள் ரங்கநாதன், பாண்டியன், துா்காஆனந்த், மீனாட்சி நடராஜன் ஆகியோா் தங்களது பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
கோரிக்கைகளை கேட்டறிந்த நகராட்சி ஆணையா் அசோக்குமாா், பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.அதனைத் தொடா்ந்து செலவினங்கள் உள்பட 43 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தாமதமாக வந்த ஆணையா்: முன்னதாக, கூட்டம் தொடங்கியபோது ஆணையா் வரவில்லை. வெகுநேரம் காத்திருந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள் திடீரென வெளிநடப்பு செய்தனா். பின்னா் வந்த ஆணையா் அசோக்குமாா், பேருந்து நிலையத்தில் ஒரு தனிநபா் பிரச்னைக்காக விசாரணை மேற்கொண்டதில் தாமதமாகிவிட்டதாக கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினாா். அதன் பிறகு கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது. இதனால் கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.