ஜெயங்கொண்டத்தில் 1,302 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘தாயுமானவா்’ திட்டத்தின் கீழ் கல்வி, சுயதொழில் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அதன் தொடா்ச்சியாக, அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்துகொண்டு, 1,302 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 62 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
முன்னதாக அவா் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சு. தேன்ராஜ், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பி.சுமதி, நகா்மன்றத் தலைவா்கள் ஜெயங்கொண்டம் சுமதி, அரியலூா் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
