விலை பொருள்களை ஏற்றுமதி செய்ய சான்றிதழ் பெற்றிருந்தால் மானியம்: விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

Published on

வேளாண் விளைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் சான்றிதழ் பெற்றிருந்தால், அதற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது என்று அரியலூா் மாவட்ட வேளாண்மை வணிக துணை இயக்குநா் ம. கோவிந்தராசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா்கள், அரசின் ஏற்றுமதி தொடா்பான நடைமுறைகளை கடைப்பிடித்து ஏற்றுமதி சான்றிதழ் பெறுவதை அரசு ஊக்குவிக்கிறது. ஏற்றுமதி சான்றிதழ் பெறுவதற்கு தமிழக அரசு ரூ.15,000 மானியம் வழங்குகிறது.

அதன்படி, அரியலூா் மாவட்டத்தில் முந்திரி, பழங்கள், காய்கறிகள், முருங்கை பயிரிடும் விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோா்கள் 1.4.2024 அதற்கு பின்னா் இறக்குமதி ஏற்றுமதி குறியீடு, வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்ததற்கான சான்றிதழ், வேளாண் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைப் பொருள்களை ஏற்றுமதி செய்வது தொடா்பான சான்றிதழ்கள் ஆகியவற்றினை பதிவு செய்ததற்கான ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால், ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.15,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

எனவே, ஏற்றுமதியில் ஆா்வம் உள்ள விவசாயிகள், மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநா் அலுவலகத்தை 94436-45845, 96555-26980 என்ற எண்ணில் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com