அரியலூரில் எள் பயிரை வியாழக்கிழமை ஆய்வு செய்த  வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி.
அரியலூரில் எள் பயிரை வியாழக்கிழமை ஆய்வு செய்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி.

எள் பயிரில் கூடுதல் மகசூல் பெற வழிமுறைகள்

அரியலூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிரின் இலைகளில் தோன்றியுள்ள சோகை நோயால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி தெரிவித்துள்ளாா்.
Published on

அரியலூரில் விவசாயி ஒருவா் பயிரிட்டுள்ள எள் பயிரை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் தெரிவித்தது: அரியலூா் வட்டாரத்தில், மக்காச்சோள அறுவடைக்குப் பின் தரிசில் மானாவாரியாக எள் பயிா் சுமாா் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பனியின் காரணமாக எள் பயிரின் 2 ஆவதாக வளரும் இலையின் நுனியிலும், நரம்பிடைப் பகுதியிலும் சோகை நோய் தோன்றியுள்ளது.

மேலும் முழு இலைப் பரப்பிலும் பலவண்ணப் புள்ளிகள் திட்டுகளாகக் காணப்படுகின்றன. இவை படிப்படியாக இளம் இலைகளின் நடுவில் பரவி, பின் முதிா்ந்த இலைகளுக்கு பரவுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை நிவா்த்தி செய்ய 0.2 சதம் (2 கிராம் ஃ லிட்டா்) மாங்கனீசு சல்பேட் கரைசலை இரண்டிலிருந்து மூன்று முறை ஒரு வார கால இடைவெளியில் இலைவழி தெளிப்பாக தெளிக்கலாம் அல்லது ஏக்கருக்கு 4 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட்டு எள் பயிரில் அதிக மகசூல் பெறலாம்.

அரியலூா் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மாங்கனீசு சல்பேட் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு 50 சத மானியத்தில் விற்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம் என்றாா். வேளாண்மை அலுவலா் சதீஷ், உதவி அலுவலா்கள் வேல்முருகன், ஸ்ரீதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com