ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.1.61 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள் தொடக்கம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வளா்ச்சித்திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இலையூரில் ரூ 20.13 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க கட்டடம், ரூ.11 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம், மருதூா் கிராமத்தில் ரூ.12.70 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம், இடையக்குறிச்சியில் ரூ.16.45 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், வல்லம் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை, ராங்கியம் கிராமத்தில் ரூ.12.70 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை, கவரப்பாளையம் கிராமத்தில் தலா ரூ.16.45 லட்சம் மதிப்பில் இரண்டு அங்கன்வாடி மைய கட்டடங்கள், திருக்களப்பூரில் ரூ.13.56 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை, ரூ.37.63 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை அந்தந்த கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் பங்கேற்று திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளா் (பால்வளம்) நாராயணசாமி, (பொது விநியோகம்)சாய்நந்தினி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்சாமி, அன்புச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

