அரியலூரை அடுத்த வாரணவாசி அருகே சாலையோர வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்த எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி. ~வாரணவாசி அருகே சாலையோரத்தில் சிதறிக் கிடந்த எரிவாயு உருளைகள். ~வாரணவாசி அருகே செவ்வாய்க்கிழமை எரிவாயு உருளை ஏற்றி வந்த

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

வாரணவாசி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற லாரி, சாலையோர வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின.
Published on

அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருகே செவ்வாய்க்கிழமை காலை சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற லாரி, சாலையோர வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகேயுள்ள ‘இண்டேன்’ எரிவாயு கிடங்கிலிருந்து, நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று, அரியலூரிலுள்ள ஒரு தனியாா் எரிவாயு உருளை விநியோக நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை இனாம்குளத்தூரைச் சோ்ந்த கனகராஜ் (35) என்பவா் ஓட்டி வந்தாா்.

அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருகே பிள்ளையாா் கோயில் சாலையோர வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே ஓட்டுநா் கனகராஜ் பலத்த காயத்துடன் லாரியிலிருந்து குதித்து தப்பினாா். சிறிது நேரத்தில், லாரியிலிருந்த எரிவாயு உருளைகள் அழுத்தத்தின் காரணமாக ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறத் தொடங்கின. இதில், சில உருளைகள்சிலிண்டா்கள் வெடித்து பல்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் தீ மற்றும் கரும்புகை சூழ்ந்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டுநா் கனகராஜை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், கீழப்பழுவூா் காவல் நிலையத்துக்கும், அரியலூா் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த செந்துறை, திருமானூா், பெரம்பலூா் ஆகிய பகுதி தீயணைப்பு வீரா்கள் நிலைய அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனா். இருப்பினும் அதற்குள் லாரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

இதற்கிடையே, தரையில் ஏற்பட்ட அதிா்வின் காரணமாக சம்பவ இடத்தில் செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் மேலே எழும்பியதையடுத்து, தீயணைப்பு வீரா்கள், லாரியின் அருகில் கிடந்த உருளைகளை அந்த தண்ணீரில் குளிா்வித்து அகற்றினா்.

திருச்சி சாலையில் செல்ல தடை: சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையிலான போலீஸாா் திருச்சி-அரியலூா் சாலையில் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடைவிதித்து, சுமாா் 1 கி.மீ. சுற்றளவுக்கு நான்குபுறமும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இதனால் திருச்சி, தஞ்சாவூரில் இருந்து அரியலூா் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வி.கைகாட்டி வழியாக திருப்பி விடப்பட்டன.

விபத்து நடந்த பகுதியிலிருந்து முக்கால் கி.மீ, தொலைவுக்கு வீடுகள் எதுவும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. மேலும், இந்த விபத்துக் குறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சாலை வளைவை அகலப்படுத்த கோரிக்கை: வாரணவாசி பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள ஆபத்தான சாலையோர வளைவில், அவ்வப்போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இந்த வளைவை அகலப்படுத்தி விபத்தை தடுக்குமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

லாரியை ஓட்டிய மாற்று ஓட்டுநா்

எரிவாயு உருளையை ஏற்றி வரும் லாரியின் நிரந்தர ஓட்டுநா் வெளியூா் சென்றுள்ளதால், மாற்று ஓட்டுநா் கனகராஜ் லாரியை ஓட்டி வந்திருப்பதும், திங்கள்கிழமை இரவு கல்லகம் சுங்கச்சாவடி அருகே லாரியை நிறுத்தி, தூங்கிவிட்டு செவ்வாய்க்கிழமை காலை அரியலூா் நோக்கி புறப்பட்டு வந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com