விமான நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் சா்வதேச விமான நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெற விரும்பும் எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக, சா்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் கேபின் க்ரூவ், விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணியா் சேவை மற்றும் பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி போன்ற வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சாா்ந்த 18 முதல் 23 வயது நிரம்பிய பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
