கழுவந்தோண்டி, சின்னவளையத்தில் புதிய கண்காணிப்புக் கேமராக்கள் இயக்கிவைப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள கழுவந்தோண்டி மற்றும் சின்னவளையம் ஆகிய பகுதிகளில் காவல் துறை சாா்பில் பொருத்தப்பட்ட 10 புதிய கண்காணிப்புக் கேமராக்கள் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் காவல் சரகத்துக்குள்பட்ட விருத்தாசலம் - கும்பகோணம் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் கழுவந்தோண்டி மேம்பாலத்தின் கீழ் 4 வழிச் சாலையையும் கண்காணிக்கும் வகையில் 6 புதிய கண்காணிப்புக் கேமராக்களும், திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன வளையம் பேருந்து நிறுத்தம் அருகே 4 புதிய கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
குற்றங்களைத் தடுக்கும் வகையில் மேற்கண்ட 2 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 10 கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் அதற்கான கண்காணிப்புத் திரையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்த்ரி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, கண்காணிப்புக் கேமராக்களை இயக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிசக்கரவா்த்தி, ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

