ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை குறைக்காவிட்டால் நடவடிக்கை
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தைக் குறைக்காவிட்டால் தீபாவளிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
இதுகுறித்து அரியலூா் மாவட்டம், ஆதனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்தின் சாா்பாக விடப்பட்ட டெண்டா் அடிப்படையில் கடந்த காலங்களைப் போலவே தீபாவளி நேரத்தில் தனியாா் பேருந்துகளும் இயக்கப்படும்.
அது மட்டுமில்லாமல் மற்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களான கும்பகோணம், மதுரை, கோவை மற்றும் சேலம் போக்குவரத்து கழகங்களும் டெண்டா் வைத்து தனியாா் பேருந்துகளை வாடகை அடிப்படையில் இயக்க அறிவுரை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவா்களை அழைத்துப் பேசியதையடுத்து அவா்கள் நிா்ணயித்த தொகையை விட குறைத்து பேருந்துகளை இயக்கினாா்கள்.
கடந்த பூஜை விடுமுறை காலங்களில் ஒரு சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளிக்கு தனியாா் பேருந்து நிறுவனங்களை அழைத்து பேச போக்குவரத்து துறை ஆணையா் காவல் துறையோடு இணைந்து கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளாா்.
இதற்கிடையே சனிக்கிழமை 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இதுதொடா்பாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகளுடன் பேசியிருக்கிறேன். அவா்களும் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு அறிவுரை வழங்குவதாகத் தெரிவித்துள்ளாா்கள்.
கிட்டதட்ட 500-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்து நிறுவனங்கள் இருக்கும் சூழலில் 10 போ் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் அந்தக் கட்டணத்தை குறைக்காவிட்டால் தீபாவளிக்கு முன்பாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.
