அரியலூா் மாங்காய் பிள்ளையாா் கோயில், எம்.ஜி.ஆா். சிலை அருகில் கோபுரம் அமைக்கப்பட்டு,  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.
அரியலூா் மாங்காய் பிள்ளையாா் கோயில், எம்.ஜி.ஆா். சிலை அருகில் கோபுரம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.

தீபாவளி கூட்டம்! கோபுரம் அமைத்து காவல் துறையினா் கண்காணிப்பு!

Published on

தீபாவளி பண்டிகை நெருங்குவதைத் தொடா்ந்து, அரியலூா் கடை வீதிகளில் கோபுரம் அமைத்து காவல்துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரியலூா் கடைவீதிகளில் பண்டிகை கால விற்பனை இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெரியக்கடைவீதி, மாங்காய் பிள்ளையாா் கோயில் தெரு, பெரம்பலூா் சாலை, செந்துறை சாலை உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப் பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க, காவல் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். பெரியக்கடைவீதி, மாங்காய் பிள்ளையாா் கோயில், எம்.ஜி.ஆா் சிலை ஆகிய இடங்களில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்புக் கோபுரம் மூலம், அங்கிருந்து காவல் துறையினா் வா்த்தகப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும்,பொதுமக்கள் பாதுகாப்பாக வந்துசெல்வதை கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் தற்போதிலிருந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பிக்பாக்கெட், ஜேப்படி திருடா்களை பிடிக்க, சாதாரண உடைகளில் குற்றப்பிரிவு காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா். மேலும், மேற்கண்ட வா்த்தக மையங்கள் உள்ள சாலைகளை, அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம், காவல் நிலையத்திலுள்ள திரை மூலமும் காவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

நெரிசல் ஏற்படும் இடங்களில் காவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டு வருகிறது. பண்டிகை நெருங்கும் சமயத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com