விபத்தில்லா தீபாவளி கொண்டாட அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.
Published on

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

தீபாவளி நாளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கமாக உள்ளது. அதே வேளையில் பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியிருக்கிற நிலம், நீா், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றன.

வயதான பெரியோா், நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகா்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுகிறாா்கள்.

பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது.

அதன் தீா்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் நிா்ணயித்துள்ளது.

மேலும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடிக்க ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com