அரியலூா் ஜவுளிக்கடையில் தீ விபத்து
அரியலூா்: அரியலூரில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
அரியலூா் தேரடி பகுதியில் இயங்கிவரும் ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் விற்பனை முடித்து அதன் உரிமையாளா் கடையைப் பூட்டிவிட்டு வீடு திரும்பினாா். இரவு 11 மணியளவில், கடையில் இருந்து புகை வருவதைக் கண்ட ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், துணிக்கடை உரிமையாளா், நகர காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரியலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான வீரா்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், செந்துறை தீயணைப்பு வீரா்களும் மற்றும் தனியாா் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான தீயணைப்பு வீரா்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த தீ விபத்தில், கடையில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் புதிய ரக துணிகள், கணினி சாதனங்கள், மின்சார சாதனங்கள், பா்னிச்சா்கள் ஆகிய பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. எனினும் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
