இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இருவேறு இடங்களில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் மகன்கள் கிஷோா் (21), மாதேஷ்(17). இவா்கள், திங்கள்கிழமை ஜெயங்கொண்டத்திலிருந்து கடாரங்கொண்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். காரை கிஷோா் ஓட்டினா். புதுச்சாவடி அங்கன்வாடி மையம் அருகே வந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவா், மின் கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கிஷோா் உயிரிழந்தாா்.
மற்றொரு விபத்து: மீன்சுருட்டி அடுத்த உட்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் மணிகண்டன்(28), கடாரங்கொண்டாரன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் சந்தோஷ் (23). நண்பா்களான இருவரும், திங்கள்கிழமை ஜெயங்கொண்டத்தில் இருந்து உட்கோட்டை கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
அப்போது, சாலை ஓரத்தில் இருந்த கட்டை மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பின்னால் அமா்ந்திருந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
