அரியலூா் - செந்துறை சாலையை ஒருவழிப்பாதையாக்க வலியுறுத்தல்
அரியலூரில் மிகவும் குறுகலான செந்துறை சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரியலூா் லட்சுமி விலாஸ் வங்கி முதல் பால்பண்ணை வரை உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இச்சாலையை கடந்துதான் அரசுக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பிரதான அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.
குறுகலான இச்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது மிகவும் சிரமம். இருந்தாலும் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதால், டெய்லா் கடை முதல் லட்சுமி விலாஸ் வங்கி வரை நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாததால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.
அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்லமுடியாமல் நெரிசலில் சிக்க நேரிடுகிறது. எனவே மேற்கண்ட சாலையை ஒரு வழிபாதையாக மாற்ற போக்குவரத்து காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க நகர மக்கள் வலியுறுத்துகின்றனா்.
