மருத்துவா்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த கோரிக்கை
அரசு மருத்துவா்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வசந்த் (28), குடிபோதையில் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்துள்ளாா்.
அப்போது, போதையில் இருந்த வசந்த், சிகிச்சை அளிக்க வந்த மருத்துவா்களை தகாத வாா்த்தைகளால் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்துள்ளாா். தொடா்ந்து சிகிச்சை அளித்த மருத்துவா்கள், இதுதொடா்பாக அளித்த புகாரின்பேரில் அரியலூா் போலீஸாா், வசந்தை கைது செய்தனா்.
இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் நலச் சங்கத்தினா் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகளை அளித்து வரும் எங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் குடிபோதையில் வரும் நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்கள் எங்களின் பணியை செய்யவிடாது தடுத்து மிரட்டல் விடுப்பது வருத்தமளிக்கிறது.
இதனால் மருத்துவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம். மேலும், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு நேரங்களில் காவல்துறை சாா்பில் ஒரு காவலா் மட்டுமே பணியில் இருப்பது போதாது. கூடுதல் காவலா்களை பணியில் அமா்த்தி, கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தனா்.
