ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை: நயினாா் நாகேந்திரன்

அதிமுக-வால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக ரத்து செய்ததைத் தவிர மக்களுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தப்படவில்லை என்றாா் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
Published on

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக ரத்து செய்ததைத் தவிர மக்களுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தப்படவில்லை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், பாஜக சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: அரியலூா் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் ரூ.1.50 லட்சம் பேருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரூ.35 லட்சம் பேருக்கு பயிா்ப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 8 மலிவு விலை மருந்தகம். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு காப்பீடு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2,769 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.80 லிருந்து ரூ.83-ஆக உயா்த்தியுள்ளது. பருத்திக்கு ரூ.102 உயா்த்தி தரப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதிமுக ஆட்சியில் ரூ.22 கோடி மதிப்பில் புதிய நீதிமன்றம், புதிய கலைக் கல்லூரி, ரூ.11 கோடி மருத்துவமனை கட்டடம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன.

கிடப்பில் அதிமுக கொண்டுவந்த திட்டங்கள்

தமிழக முதல்வா் ஸ்டாலின் அதிமுக கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, மக்களுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அரியலூா் மாவட்டத்துக்கு நீா் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த இரு வாரங்களாக ஜெயங்கொண்டத்தில் தண்ணீா் பிரச்னை உள்ளது. சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். நகராட்சிகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அரியலூா் மாவட்டத்தில் ஒரு ‘சிட்கோ’ கூட கொண்டுவரப்படவில்லை. இதில், திருமாவளவன் சமூக நீதி குறித்துப் பேசுகிறாா். இங்கு எஸ்.சி. எஸ்.டி தெருக்களில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லை.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.110 கோடியில் திருமானூா் கொள்ளிடத்தில் புதிய பாலம், ரூ.300 கோடியில் காலணித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டநிலையில் அனைத்தையும் திமுக ரத்து செய்ததைத் தவிர மக்களுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகின்றனா் என்றாா்.

பிரசாரத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, அதிமுக மாவட்டச் செயலா் தாமரை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com