வெள்ளாற்று இணைப்புச் சாலை போராட்டக் குழு கூட்டம்
அரியலூா் மாவட்டம், ஆா்.எஸ். மாத்தூா் அருகேயுள்ள வெள்ளாற்று மேம்பாலத்தில் வெள்ளாற்று இணைப்புச் சாலை போராட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு, உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவா் ஞானமூா்த்தி தலைமை வகித்தாா். கூட்டத்தில், மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிறு மழைக்கே இணைப்புச் சாலையின் இரு பக்கமும் அரிப்பு ஏற்பட்டு வாரி போல காணப்படுவதை சரிசெய்ய வேண்டும்.
இணைப்புச் சாலை 20 மீட்டா் நீட்டித்து கோட்டைக்காடு சாலையோடு இணைத்து மழைநீா் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் முடிமன்னன், மண்டல துணைச் செயலா் ராஜேந்திரன், பாமக கடலூா் மாவட்டத் தலைவா் ஆடியபாதம், விசிக விவசாயப் பிரிவு செயலா் பாலசிங்கம், அதிமுக ஓபிஎஸ்அணி ஒன்றியச் செயலா் எழிலரசன் மற்றும் கோட்டைக்காடு, ஆலத்தியூா் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
