குளித்தலை அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உதவி இயக்குநர் பி. ராமசாமி வியாழக்கிழமை விசாரணை நடத்தினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பரளியைச் சேர்ந்த பள்ளி மாணவியை மைலாடி பகுதியைச் சேர்ந்தவர் கடந்த 20-ம் தேதி மாணவி பள்ளியை விட்டு வரும்போது, பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21-ம் தேதி புகார் அளித்தனர். புகார் கொடுத்து 3 நாள்களாகியும் குற்றவாளியை கைது செய்யாமல் காவல் துறையினர் காலம் தாழ்த்தி வந்ததைக் கண்டித்து கடந்த திங்கள்கிழமை பரளி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய வியாழக்கிழமை குளித்தலை வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உதவி இயக்குநர் பி. ராமசாமி, பள்ளி மாணவியை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி நடைபெற்றதாக கூறப்பட்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து குளித்தலை காவல் நிலையத்துக்கு வந்த அவர் மாணவியின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆரம்ப நிலையில் இருந்து இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
விசாரணையின்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை அலுவலர் இனியவன், கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலாஜி, குளித்தலை கோட்டாட்சியர் சித்திரைராஜன், வட்டாட்சியர் சி. ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். ஜமீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.