நங்கவரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சவாரிமேடு பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட சவாரிமேடு பகுதியில் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நங்கவரம் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்கும் பொருட்டு உரக்கிடங்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் குளித்தலை கோட்டாட்சியரிடம் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் முடிவு எட்டப்படாத நிலையில், திங்கள்கிழமை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லையென்றும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்படும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை இப்பகுதி மக்கள் கூறியது:
சவாரிமேடு பகுதியில் உரக்கிடங்கு அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், மாரியம்மன் கோயில் ஆகியவை உள்ளன. இங்கே உரக்கிடங்கு அமைக்கப்பட்டால். பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் இப்பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பட்டு வருகிறது. உரக்கிடங்கு அமைக்கப்பட்டால், சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே உரக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
இதுகுறித்து, குளித்தலை எம்எல்ஏ அ. பாப்பாசுந்தரத்திடம் கோரிக்கை வைத்தபோது, அவர் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.