குளித்தலை, செப். 23: விபத்தில் காயமடைந்தவருக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்காததால், குளித்தலையில் அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பொய்யபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சி. நரேந்திரன் (58). விவசாயி. இவர் கடந்த 8.9.2010 அன்று கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மகாதானபுரத்திலிருந்து சித்தலைவாய்க்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கம்பநல்லூர் ரெட்டைமரத்தான் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியதில் நரேந்திரன் படுகாயமடைந்தார். இதையடுத்து, விபத்து இழப்பீடு தொகை வழங்கக் கோரி குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் 6.2.2010-ல் வழக்கு தொடுத்தார் நரேந்திரன். இவ்வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி கே. அய்யப்பன்பிள்ளை, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1.09 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டுமென 27.01.2014-ம் தேதி உத்திரவிட்டார்.
ஆனால், போக்குவரத்து கழகம் இந்தத் தொகை வழங்காததால், 20.6.2014-ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார் நரேந்திரன். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன்பிள்ளை போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து ஒன்றை ஜப்தி செய்ய 5.9.2014-ம் தேதி உத்திரவிட்டார். இதையடுத்து, மேட்டுப்பாளைத்தில் இருந்து குளித்தலை வழியாக திருச்சி சென்ற அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனர்.