Enable Javscript for better performance
மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி பலி; மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கரூர், ஜன. 27: கடவூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் திருச்சி -பாளையம் சாலையில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டனர்.

    கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் கொசூரை சேர்ந்த கருப்பையா மகள் அபி (9). இவர் செங்குளம் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 22-ம் தேதி கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு நான்கு நாளாக சிகிச்சை மேற்கொண்டும் குணமாகாததால் தீவிர சிகிச்சைக்காக கடந்த 25-ம் தேதி திருச்சி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அபி அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    கடவூர் வட்டத்தில் கொசூர் பகுதியில் மர்மக் காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் உயிரிழந்த சிறுமி அபியின் உடலைக் கொண்டு வந்த ஆம்புலன்ûஸ பிற்பகல் 3 மணியளவில் மறித்து திருச்சி - பாளையம் சாலையில் கொசூரில் நிறுத்தி இப்பகுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்க வேண்டும்.

     காய்ச்சலால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன், சாலையில் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    தகவலறிந்த குளித்தலை கோட்டாட்சியர் சித்திரைராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் ஜமீம், சுகாதாரத் துறை துணை இயக்குநர் நளினி ஆகியோர்

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியலால் பாளையம் - திருச்சி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனிடையே, கொசூரில் உடனடியாக சுகாதாரத் துறை மூலம் 4 படுக்கைகள் கொண்ட சுகாதார மையம் செயல்படத் தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai