சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க ரூ. 2.86 கோடி ஒதுக்கீடு: வேளாண் இணை இயக்குநர் தகவல்

கரூர் மாவட்டத்தில் சொட்டுநீர், தெளிப்பு பாசனம் அமைத்திட நிகழாண்டில் ரூ. 2.86 கோடி ஒதுகீடு பெறப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அ. அல்தாப் தெரிவித்தார்.
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் சொட்டுநீர், தெளிப்பு பாசனம் அமைத்திட நிகழாண்டில் ரூ. 2.86 கோடி ஒதுகீடு பெறப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அ. அல்தாப் தெரிவித்தார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
நாளுக்கு நாள் தண்ணீர்த் தேவை அதிகரித்துவரும் நிலையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இதற்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் மிகவும் அவசியம்.
சிறு,குறு விவசாயிகள் தங்களிடமுள்ள நிலம் முழுமைக்கும் 100 சத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது. அதாவது சிறு விவசாயிகள் நன்செய் நிலமாக இருந்தால் 1 ஹெக்டேரிலும், புன்செய் நிலமாக இருந்தால் 2 ஹெக்டேரிலும் எந்தப் பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாக இருந்தாலும் விருப்பத்தின்பேரில் அவருக்குச் சொந்தமாக இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
அந்த விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும். விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுக வேண்டும்.
சிறு,குறு விவசாய சான்றை இணைக்க வேண்டும். ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.  சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கும் முன் விவசாயிகளின் நிலத்தை வேளாண் பொறியியல் துறை பொறியாளர்கள் களப்பணி மேற்கொண்டு பின்பு விலைப்புள்ளியை டான்ஹோடா வலைதளத்தில் பதிவேற்றம் செய்வர்.
பின்பு அதனடிப்படையில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் உரிய நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்குவார்.  அதில் விவசாயியின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டுத் தொகையை தேர்ந்தெடுத்த நிறுவனத்துக்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும். அதற்குப் பின் விவசாயியின் நிலத்தில் சொட்டுநீர் தெளிப்பு பாசனம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டுக்கு நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் 840 ஹெக்டேரிலான வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைத்திட ரூ. 2.86 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  மேலும் நிகழாண்டில் கரும்பு மற்றும் தென்னை பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com