திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
கரூரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த கோவைச்சாலை, ஜவஹர் சாலை, காமாட்சியம்மன் கோயில் வீதி, பேருந்துநிலையம், அரசு மருத்துவமனை பழைய திண்டுக்கல் சாலை, பழைய பேருந்து நிலையம், திருமாநிலையூர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, லைட் ஹவுஸ் கார்னர், காந்திகிராமம், பசுபதிபாளையம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதேபோல புலியூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிக்குறிச்சி, பள்ளபட்டி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
அனைத்து பள்ளிகளும் பள்ளிகள் வழக்கத்தை விட 3.40 மணிக்கு மூடப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன் தலைமையில் ஏராளமான போலீஸார் கரூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலைய மனோகரா கார்னர், ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டனர். மேலும், கலைஞர் அறிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற வெளியூர் பேருந்துகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கோவையில் இருந்து கரூர் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்
பாதுகாப்பு கருதி பேருந்துப் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைக்கு பேருந்தை கொண்டு சென்றார். இதையடுத்து, பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போலீஸார் மாற்றுப் பேருந்தை ஏற்பாடு செய்த பயணிகளை திருச்சிக்கு அனுப்பிவைத்தனர். இரவு 8 மணிக்கு மேல் பேருந்து நிலையம் வந்தடைந்த பயணிகள் ரயில் நிலையம் சென்று அவரவர் ஊருக்கு சென்றனர்.
உள்ளூரில் இயக்கப்பட்ட மினி பேருந்துகள், மினி ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.