கோடங்கிப்பட்டிக்கு  சீரான குடிநீர் கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

சீரான குடிநீர் கோரி குறைதீர் கூட்டத்தில் கோடங்கிப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 
Published on
Updated on
1 min read

சீரான குடிநீர் கோரி குறைதீர் கூட்டத்தில் கோடங்கிப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். 
கோடங்கிப்பட்டி கிராம மக்கள் அளித்த மனு: கோடங்கிப்பட்டி முத்தாளம்மன் நகருக்கு தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆழ்குழாய் பழுதானதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், குடிநீருக்கு அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று எடுத்து வருகிறோம். குடிநீருக்கு திண்டாடுவதால் ஆழ்குழாய் கிணற்றை சரிசெய்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர்-திருச்சி 4 வழிச்சாலை அமைப்பதை தடுக்க வேண்டும்: கிருஷ்ணராயபுரம் சிவாயம் அடுத்த குப்பாச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் அளித்த மனுவில், கரூர்-திருச்சி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற பாப்பக்காபட்டி ஏரி நடுவே கல் நடப்பட்டுள்ளது. இந்தச் சாலை ஏரி நடுவே அமைக்கப்பட்டால் ஏரியில் தண்ணீர் தேக்க முடியாது. மேலும் ஏரி வழியாக சாலை அமைக்கப்படும் போது விவசாய கிணறு, நிலங்கள் பாதிக்கும். எனவே குளித்தலை-மணப்பாறை சாலை அருகே அமைத்தால் ஏரி, விவசாய நிலங்கள்பாதுகாக்கப்படும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கண்ணமுத்தாம்பட்டியில் அருந்ததியர்களுக்கு 30 ஆண்டுக்கு முன்பு தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் மேற்கூரை பழுதடைந்திருப்பதால் மழைக் காலங்களில் நீர் கசிவதோடு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும்.
கோரிக்கை தொடர்பாக 302 மனுக்கள் அளிப்பு:
முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 302 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டன.
தொடர்ந்து, கடவூர் வட்டம், கீழ்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததையடுத்து அவரது தாயார் லட்சுமியிடம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50,000க்கான காசோலை,  மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மனு அளித்தவருக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டையை ஆட்சியர் த.அன்பழகன் வழங்கினார். 
மேலும், பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பூபதி, கனவு ஆசிரியர் விருது பெற்றமைக்காக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 
மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனந்தநாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்ரமணியம், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின நல அலுவலர் த.குமரேசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.