சாயக்கழிவால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கிடைக்க சட்டப்பேரவையில் குரல் எழுப்ப அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அண்மையில் கரூர் வந்த டிடிவி தினகரனிடம், சங்கச் செயலாளர் ராமலிங்கம் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: கரூர் மாவட்டத்தில் இயங்கும் சாய, சலவை ஆலைகள் பெரும்பாலும் சுத்தகரிக்கப்படாத சாயக்கழிவுகளை அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால்களில் திறந்து விடுகின்றன. இதனால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள் விஷமாக மாறுவதோடு, உப்புத் தன்னை கொண்டவையாக மாறிவிட்டன. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 2003, 04ஆம் ஆண்டுகளில் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இழப்பீட்டு ஆணையம் அறிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் 2005-2018 வரை எந்தவிதமான நிவாரணம் அறிவிக்கப்படவும் இல்லை.
இருப்பினும் சாயப்பட்டறை, சலவை ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகளை திறந்து விடுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. விவசாயிகளின் கோரிக்கையை சட்டசபையில் எழுப்பி உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.