வெளிநாட்டுத் தயாரிப்புகளால் கரூரில் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி, கொசுவலைத் தயாரிப்பு தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் கரூர் தொகுதி அதிமுக உறுப்பினர் மு.தம்பிதுரை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, துணைக் கேள்வி எழுப்பி அவர் பேசியதாவது:
நாட்டில் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) உச்சத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், அது உண்மை அல்ல. பெரும்பாலான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. எனது கரூர் மக்களவைத் தொகுதி ஜவுளித் தொழில், கொசுவலைக்கு மிகவும் புகழ்பெற்ற பகுதியாக உள்ளது.
மேலும், இங்கு திறன் மேம்பாடு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இங்குள்ள சிறுதொழில் நிறுவனங்களில் பல மூடப்பட்டுவிட்டன. நமது நாட்டில் சீனத் தயாரிப்புகள் குவிக்கப்பட்டு வருவதுதான் இதற்குக் காரணமாகும். பெரும்பாலான மக்கள் சீனத் தயாரிப்புகளையே வாங்கி வருகின்றனர். நமது தொழில்துறை திருப்திகரமாக இல்லாததால் இது நிகழ்கிறது.
அதேபோன்று, வங்கதேசமும் அந்நாட்டின் பொருள்களை நமது நாட்டில் குவித்து வருகிறது. கரூர் தொகுதியில் கொசுவலை தயாரிப்பு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது நாட்டுக்குள் மலிவான விலையில் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால், இதுபோன்ற வெளிநாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தயாரிப்புகள் சட்டவிரோதமாக அனுப்பப்படுகின்றன. இதனால், குறிப்பாக எனது கரூர் தொகுதியில் தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன என்றார் தம்பிதுரை.
இதற்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பதில் அளித்துப் பேசுகையில், "பல முக்கியமான விஷயங்களை அவையில் உறுப்பினர் (தம்பிதுரை) சுட்டிக்காட்டியுள்ளார். அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளைக் களைவதற்காக வர்த்தகத் துறை அமைச்சகம் விரைவில் ஒரு புதிய தொழில் கொள்கையை அறிவிக்க உள்ளது. இது ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போது அமைச்சகங்கள் இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொள்கைத் திட்டம் விரைவில் அமைச்சரவைக்கு எடுத்துச் செல்லப்படும். பொருள்களின் தரத்தை மதிப்பிடுவதற்காக ஒரு முக்கிய திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது' என்றார்.