தாந்தோணிமலையில் ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி மாணவியர் விடுதி காணொலிக் காட்சி மூலம் திறக்கப்பட்டதையடுத்து குத்துவிளக்கேற்றி மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட மாணவியர் விடுதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இதையடுத்து விடுதியில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் கூறியது: மாவட்டத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின நலத்துறையின் கீழ் 19 பள்ளி, கல்லூரி விடுதிகள் செயல்படுகின்றன. இதன் மூலம் 1,215 மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது திறக்கப்பட்ட விடுதியில் 100 மாணவியர் தங்கி படிக்கவுள்ளனர் என்றார்.
தொடர்ந்து, அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பில் நன்மதிப்பெண் பெற்ற 8 மாணவ, மாணவியர், 6ஆம் வகுப்பை விரும்பும் உண்டு, உறைவிடப் பள்ளியில் படிப்பதற்கான உத்தரவு, அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் நன்மதிப்பெண் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்1 வகுப்பை விரும்பும் உண்டு, உறைவிடப் பள்ளியில் படிப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், ஆதிதிராவிட, பழங்குடியினர் நல அலுவலர் ஜெ.பாலசுப்ரமணியம், கரூர் நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதி வை.நெடுஞ்செழியன், விடுதி காப்பாளர்கள் இந்திராகாந்தி, முருகேசன், அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.